அடியாள் – புத்தக விமர்சனம்

புத்தகம் : அடியாள் (ஓர் அரசியல் அடியாளின் வாக்குமூலம்)

ஆசிரியர் : ஜோதி நரசிம்மன்

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

நம்மில் நிறைய பேர் அனுபவ பிரியர்களாக இருக்கலாம் காட்டுக்குள் பயணம் , மலை ஏறுதல் , உயரத்தில் இருந்து கயிறு கட்டி குதித்தல் போல புதிது புதிதான அனுபவங்களை தேடுபவர்களாக இருக்கலாம் , ஆனால் அப்படி பட்டவர்கள் கூட சிறை அனுபவம் எப்படி இருக்கும் என்ற துளி சிந்தனைக்குள் கூட சென்றிருக்க மாட்டார்கள் . சிறைச்சாலை என்றால் அருவருப்பான அப்படி ஒரு பார்வை . அதற்கு சரியான பதில் கூட உங்களிடம் இருக்கலாம் .

அனைத்தையும் தள்ளி வையுங்கள் சிறைச்சாலை அனுபவம் வேண்டுமா ? இந்த புத்தகத்தின் வழியாக சிறைச்சாலைக்குள் உங்களை உலாவ விடுகிறார் புத்தகத்தை எழுதியவரும் அனுபவத்துக்கு சொந்தக்காரருமான முன்னாள் அடியாள் ஜோதி நரசிம்மன் .

நாம் சினிமாவில் காணும் சிறைசாலைகள் நிஜத்துடன் சில சதவிகிதங்கள் ஒத்து போகலாம் . ஆனால் நாம் அறியாத நிறைய நிஜங்கள் , நிகழ்வுகள் , நினைவுகள் , நடைமுறைகள் பற்றி இந்த புத்தகத்தில் நிறையவே பகிர்ந்துள்ளார் ஜோதி நரசிம்மன் .

இரண்டு முறை சிறை சென்றுள்ள ஜோதி நரசிம்மன் முதல் முறை அடியாளாகவும் இரண்டாம் முறை போராளியாக சிறைக்கு சென்ற இரு வேறு பரிணாமங்கள் , கால கட்டங்கள் , இரு வேறு மத்திய சிறைகள் என பல்வேறு பார்வையில் சிறைச்சாலையை நமக்கு சுற்றிக்காட்டுகிறார்.

உள்ளே செல்வது முதல் வெளியே வரும்வரைக்குமான அனைத்து நடைமுறைகளுடன் , ஸ்வாரசியமூட்டும் பல மனித கதைகளையும் உள்ளடக்கியுள்ளது இந்த புத்தகம் . வெளியே மட்டுமல்ல உள்ளேயும் நடக்கும் வசூல்வேட்டைகள் , வியாபாரங்கள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தலாம் .

ஒரு புத்தகம் உங்கள் வாழ்வையே புரட்டிப்போட்டு விட கூடும் என்று யாரவது சொன்னால் நீங்கள் சிரிக்கலாம் , ஆனால் அதற்கு எடுத்துக்காட்டாகவே வந்து நிற்கிறார் ஜோதி நரசிம்மன் . ஒரு புத்தகம் அவர் வாழ்க்கையையே மாற்றி விட்டது , மடைமாற்றி வேறு திசையில் பயணிக்க வைத்து விட்டது .

இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் பொழுது சிறைவாசிகளை பற்றிய உங்கள் பார்வை சில அங்குலங்களாவது விரிவடைத்திருக்கலாம் . அனைத்தையும் விட சட்ட விரோத செயல்களில் ஈடுபடாமல் சிறைச்சாலை அனுபவம் வேண்டுமா ? இந்த புத்தகத்தை வாசியுங்கள்.

புத்தகம் வாங்க : அடியாள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *