அக்னிச் சிறகுகள் – புத்தக விமர்சனம்

புத்தகம் : அக்னிச் சிறகுகள்

ஆசிரியர் : அ.ப.ஜெ. அப்துல் கலாம், அருண் திவாரி

பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Tamil) , Universities Press (English)

ஐயா அ.பெ.ஜெ அப்துல் கலாம் அவர்களும் , விஞ்ஞானியும் எழுத்தாளருமான அருண் திவாரி அவர்களும் இணைந்து எழுதிய ஐயா அப்துல் கலாம் அவர்களின் சுயசரிதை தான் இந்த அக்னிச் சிறகுகள் புத்தகம். இது நேரடியாக தமிழில் எழுதப்பட்ட புத்தகம் அல்ல , ஐயா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய Wings of Fire புத்தகத்தின் தமிழாக்கமே இந்த அக்னிச் சிறகுகள். ஐயா அப்துல் கலாம் அவர்கள் தன் சிறுவயது தொடங்கி கல்லூரி , வேலை , ஆராய்ச்சி , வெற்றிகள் , தோல்விகள் , இழப்புகள் என அத்தனையும் எழுதியுள்ளார்

தன் கனவுக்கு தொடக்கமான பால்ய பருவம் குறித்து அவர் விவரிக்கையில் , தனக்கு மிகவும் பிடித்த தன் ஊரான ராமேஸ்வரத்தை அழகாக வர்ணிக்கிறார். புத்தகம் முழுவதும் தன் ஊர் மீதான பிரியத்தை ஆங்காங்கே ஏக்கமாக குறிப்பிடுகிறார். முதல் முதலில் தன்னுடன் அறிவியல் குறித்தும் , விஞ்ஞானம் குறித்தும் உரையாடி தனக்குள் அறிவியல் ஆர்வத்தை விதைத்த தன்னை விட 15 வயது பெரியவரான நண்பர் ஜலாலுதீன் பற்றியும் , தனக்கு முன்மாதிரியான தன் தந்தை ஜெய்னுலாபிதீன் அவர்கள் பற்றியும், தனக்கு முதல் முதல் வேலை வழங்கிய ராமேஸ்வரத்திற்கு முழுவதும் தின பத்திரிகை விநியோகித்துக் கொண்டிருந்த சம்சுதீன் அவர்கள் பற்றியும் சுவாரஸ்யமாக விவரிக்கிறார் அப்துல் கலாம் அவர்கள்.

பின்பு தன் கல்லூரி பருவத்தில் ஏதோ ஒரு பாடத்தை தேர்வு செய்து , பின்பு நல்ல வழிகாட்டுதலுடன் பொறியியல் சேர்ந்தது தனக்கு உத்வேகத்தையும் நல்ல அறிவுரைகளையும் வழங்கிய பேராசிரியர்கள் பற்றியும் விவரித்து முதல் வேலை , ஆராய்ச்சிப்பணி , பின்பு இந்திய விண்வெளி ஆய்வு பணி என நமக்கு உத்வேகத்தை அளிக்கக்கூடிய ஒரு நடுத்தர குடும்ப மாணவனின் வெற்றி கதை நம் கண் முன்னே வளர்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரும் பங்களித்த விக்ரம் சாராபாய் அவர்கள் பற்றியும். அவர்கள் தன்னை இயக்குனராக தேர்ந்தெடுத்தது, SLV என்ற விண்வெளி ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு தன் தலைமையில் தோல்வியடைந்து பின்பு வெற்றியடைந்து இந்தியாவிற்கு உலக அளவில் பெயர்வாங்கி தந்ததையும் , பின்பு ப்ரித்வி , அக்னி போன்ற போர் ஏவுகணைகள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது  என அவர் விவரிக்கும் ஆராய்ச்சி வெற்றிகள் இந்தியராக நமக்கு கொஞ்சம் புல்லரிக்க தான் செய்கிறது.

தோல்விகள் மட்டுமல்ல பல இழப்புகளுக்கு மத்தியிலும் தான் வெற்றிகளை பெற்றிருக்கிறார் ஐயா அப்துல்கலாம் . தொடர்ந்து குடும்ப உறவுகள் 3 பேர் உயிரிழக்க , இந்திய விஞ்ஞானத்திற்கு உத்வேகத்தை தந்துக்கொண்டிருந்த விக்ரம் சாராபாய் உயிரிழக்க இழப்புகளுக்கும் வலிகளுக்கு மத்தியிலும் தான் தன் கனவுகளை வென்றிருக்கிறார் ஐயா. தோல்வியில் துவண்டு ஒடுங்கி உட்கார்ந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஐயாவின் வாழ்க்கை ஒரு பாடம் , சாதாரண குடும்பத்தில் பிறந்து , நாம் அவ்வளவு தான் என்று நினைத்து கவலைப்படும் அனைத்து பிரச்சனைகளையும் சந்தித்து , கடந்து சாதித்து வந்திருக்கிறார். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் மட்டுமல்ல மற்றவருக்கு கண்டிப்பாக பரிந்துரைக்கவேண்டிய புத்தகமும் கூட இது. முக்கியமாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வாங்கி பரிசளியுங்கள்

தமிழ் புத்தகத்திற்கு : அக்னிச் சிறகுகள்
ஆங்கில புத்தகத்திற்கு : Wings of Fire

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *