பாரதி நேற்று – இன்று – நாளை – புத்தக விமர்சனம்

புத்தகம் : பாரதி நேற்று – இன்று – நாளை

ஆசிரியர் : வலம்புரி ஜான்

வெளியீடு : நெய்தல் வெளி

பாரதி என்ற முற்போக்காளன் எவ்வாறாக வாழ்ந்தான் , வாழ்கிறான் எப்படி வாழ போகிறான் என்பதை மூன்று அத்தியாயங்களாக விவரிக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் .

பாரதிக்கு பிடித்தவர் பிடிக்காதவர் என்று பாகுபாடெல்லாம் கிடையாது எதிர் கருத்துடையவர்களின் நற்காரியங்களையும் புகழ்ந்து பாடுபவன் , அவனை பொறுத்தவரை நற்சிந்தனைகளை விதைக்க வேண்டுமே தவிர எதிர் கருத்துடையோர் என்பதற்காக அவர்களின் நற்சிந்தனைகளை ஒதுக்கிவிட வேண்டியதில்லை .

இதற்கு உதாரணமாக பாரதி விடுதலை போராட்டத்தில் ஒன்று மிதவாதம் பக்கம் நின்றிருக்க வேண்டும் அல்லது தீவிரவாதம் பக்கம் நின்றிருக்க வேண்டும் ஆனால் பாரதி நாட்டின் விடுதலைக்கு மிதவாதி காந்தி எவ்வளவு முக்கியமோ அதே அளவு தீவிரவாத கருத்துகள் கொண்ட திலகரும் முக்கியம் என்ற ஆழ்ந்த சிந்தனை கொண்டிருந்தமையால் இருவரையும் பற்றியும் பாடி எழுத முடிந்தது அவனால் .

தமிழகம் அறிந்த முதல் புரட்சியாளன் பாரதியாக தான் இருக்க முடியும் , சமத்துவம் , பெண் அடிமைத்தனம் , சாதி ஒழிப்பு என்று சமூக படிநிலையின் அஸ்திவாரத்தை ஆட்டி பார்த்தவன் பாரதி .

சொல்வது ஒன்றும் சித்தாந்தம் பழகுவது வேறுமாக இருக்கிற நிகழ்கால கவிஞர்கள் பாரதியிடம் கற்க வேண்டியது , கடைபிடிக்க வேண்டியவைகளையும் பட்டியலிடுகிறார் வலம்புரி ஜான் அவர்கள் .

மேனாட்டு அறிஞர்களையும் பின்தொடரும் பழக்கமுடைய பாரதி , தேசிய அறிஞர்கள் முதல் உள்ளூர் போராளிகள் வரை யாரையும் கௌரவிக்க தவறியதில்லை . அதே சமயம் உலக அறிவை வளர்த்து கொள்கிறேன் என்று உள்ளூர் பிரச்சனைகளை கண்டும் காணாமல் இருந்ததில்லை .

பாரதியின் எழுச்சிமிக்க வரிகளை சுட்டி காட்டி பாரதியின் அத்தனை பண்புகளையும் எடுத்துரைத்துள்ள ஆசிரியர் , அவன் அதன்படி வாழ்ந்ததிற்கான சான்றுகளை எடுத்துரைக்கிறார்.

அவற்றில் சில எனக்கு பிடித்த வரிகள் இங்கே

” எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்

எல்லோரும் சமம் என்பது உறுதி ஆச்சு “

” சிறுமை கண்டு பெங்குவாய்

எளிமை கண்டு இறங்குவாய் “

” பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நின்றன்

பச்சைநிறம் தோன்றுதையே நந்தலாலா “

இன்னும் பல.

தமிழை காதலித்தவன் , தேசத்தையும் காதலித்தான் , அனைத்து மதத்திலுள்ள நல்லவைகளையும் சுட்டி காட்டினான் , அனைத்து சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்தான் , தீண்டாமை , பெண் அடிமைத்தனம் என்று சமூக ஏற்றதாழ்விற்கு ஆழமாக குரல் கொடுத்தவன் பாரதி .

அவன் நேற்று , இன்று மட்டும் அல்ல என்றும் வாழுவான் , கோடி புரட்சிகள் கொட்டி தீர்க்காமல் அவன் பெயர் அழிந்து போவதில்லை . இந்த புத்தகம் படித்து முடிக்கும்பொழுது இந்த எண்ணம் உங்கள் மனதிலும் துளிர்த்தாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதே கருத்துக்களை கொண்டு வெறுப்பரசியல் செய்யும் கூட்டங்கள்கூத்தாடும் இந்த கால சூழலுக்கு பாரதியின் எழுத்துக்களை பரப்புரை செய்வது சமூகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஒன்று .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *