பட்ஜெட் விளக்கமும் – ஹல்வா ரகசியமும்

வருகின்ற பிப் 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள். செய்தித்தாள்கள் , தொலைக்காட்சி செய்திகள் சமூக ஊடகங்கள் என்று பலஇடங்களில் இந்த செய்தியை நீங்கள் பார்த்திருக்க கூடும் . சிறு குறு தொழிற்முனைவோர்களிலிருந்து பெரிய தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், பங்கு சந்தை தரகர்கள், பொருளாதார நிபுணர்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பதாக சொல்கிறார்கள். அப்படி என்ன தான் இருக்கிறது இந்த மத்திய பட்ஜெட்டில், விரிவாக மேலே பார்ப்போம்.

ஒரு வருடத்தின் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து, அந்த வருடத்தில் எவ்வளவு செலவு, எவ்வளவு வருமானம், மேற்கொண்டு வருமானத்திற்கு என்ன திட்டங்கள் இருக்கிறது, புதிதாக மானியங்கள் அறிவிக்கிறார்களா, வளர்ச்சி திட்டங்கள் எதாவது இருக்கிறதா, எவ்வளவு கடன் இருக்கிறது என்று ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே புட்டு புட்டு வைக்கும் நிகழ்வு தான் பட்ஜெட்.

அனைத்து துறைகளும், மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும்

பரிந்துரைக்கும் வருங்கால திட்டங்களின் உருவாக்கம் தான் இந்த பட்ஜெட். வெறும் அரசு துறைகள் மட்டுமின்றி பல்வேறு துறை வல்லுநர்கள் , பொருளாதார நிபுணர்கள் , தொழிலதிபர்கள் என்று அனைவரிடமும் ஆலோசனைகள் பெறப்படும்.

கடைசி கட்ட பட்ஜெட் ஆவண தயாரிப்புகள் , பட்ஜெட் தாக்கல் செய்யும் 10 நாட்களுக்கு முன்பு தொடங்கும், இந்த தொடக்கத்திற்கு அடையாளமாக தான் மத்திய நிதி அமைச்சர் இந்திய பாரம்பரிய இனிபான அல்வாவை கிண்டி நிதி துறை சார்த்த பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட இருக்கும் அனைவருக்கும் கொடுத்து ஆரம்பிப்பார்கள்.

அந்த பத்து நாட்களும் பாராளுமன்றத்தின் வடக்கு கட்டடத்திற்குள்ளே இருக்கும் அனைவரும் மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு தான் அந்த கட்டடத்திற்குள்ளிருந்து வெளியே வருவார்கள். இது எதற்கு என்றால் பட்ஜெட் பற்றிய ரகசியங்கள் முன்கூட்டியே வெளியே வராமல் இருக்கவும், முழுமையற்ற செய்திகளால் தேவையில்லாத குழப்பங்கள் வராமல் இருக்கவும் தான்.

பட்ஜெட்டில் பெரும்பாலானோர் எதிர்பார்க்கும் சில முக்கியமான விஷயங்கள் என்று பார்த்தால் வரி சலுகைகள் எதாவது இருக்கிறதா, அனைத்து விதமான வரிகளில் எதாவது மாற்றம் இருக்கிறதா, தனிநபர் வருமான வரி உட்சவரம்பில் எதாவது மாற்றம் இருக்கிறதா, தொழில் துறைகளுக்கு எதாவது விலக்குகளோ, மானியங்களோ அறிவிக்கப்பட்டுள்ளதா, சாமானிய மக்களுக்கு எது மாதிரியான திட்டங்கள், மானியங்கள், வட்டி மாற்றங்கள் வந்திருக்கின்றன என்பது பற்றி தான் அதிகமாக பேசப்படும். மற்ற படி ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால் “ ஒரு நாட்டின் வரவு செலவு கணக்கு “ தான் இந்த மத்திய பட்ஜெட்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *