கார்ப்பரேட் என்றால் கெட்ட வார்த்தையா ?

கொஞ்சம் காலமாகவே தமிழகத்தில் கார்ப்பரேட் கம்பெனிகள் பற்றிய பிம்பம் மிகவும் அபாயகரமாக கட்டமைக்கப்படுகிறது. எந்த அளவுக்கு என்றால் , கிராமப்புறத்தில் தோராயமாக ஒருவரை கூப்பிட்டு கார்ப்பரேட் என்றால் என்னவென்று கேட்டு பாருங்கள் , கிராமங்களையும் விவசாயத்தையும் அழிப்பதற்கென்றே படித்து , வேலைக்கு போய் , முதலாளி ஆகி வில்லன்களாக உருவாகியதை போல் ஒரு பெரிய விளக்கமே உங்களுக்கு கிடைக்க கூடும் .

கார்ப்பரேட் கம்பெனிகள் தவறானவர்கள் என்றே வைத்து கொள்வோம் . கார்ப்பரேட் என்பது ஒரு நிர்வாக அமைப்பு, தனி ஒருவராக முதலீடு செய்து தொடங்க முடியாத பெரிய அளவிலான தொழில்களை நிறைய பேர் பணம் முதலீடு செய்து தொழில் தொடங்குவார்கள் அல்லது விரிவாக்கம் செய்வார்கள், முதலீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டி தருவது தான் அவர்களது முதலாவது நோக்கமாக இருக்கும் என்று சரியான புரிதலை கொண்டு சேர்க்க கூடவா இங்கு யாருக்கும் வக்கில்லை.

கார்ப்பரேட் என்பதை கெட்ட வார்த்தையாக்கி விட்டு , முதலாளிகளை வில்லன்களாக்கி விட்டு என் தமிழக இளைஞர்கள் முதலாளிகளாகாமல் காலாகாலத்துக்கும் கைகட்டி தொழிலாளிகளாக மட்டும் வாழ்ந்து வாடி இறந்து போவது தான் உங்கள் அரசியலா ? தப்பானவர்களை சுட்டி க்காட்டுங்கள் போராடுங்கள் தவறில்லை ஆனால் முதலாளிகள் என்றாலே தப்பானவர்கள் என்ற கேவலமான அரசியலை திணித்து நாளைய இளைஞர் சமுதாயத்தை வெறும் தொழிலாளர் சமுதாயமாக கடமைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

அதற்காக கார்ப்பரேட் அனைத்தையும் ஊக்குவியுங்கள் என்று சொல்லவில்லை , தமிழகத்திலிருந்து உருவாகும் கார்ப்பரேட் களை தடுக்காமல் இருங்கள் என்பதே என் வாதம் . முதலாளிகள் என்றாலே தவறானவர்கள் என்ற தவறான பொருளாதார பாடத்தை கற்பிக்காமல் , நல்ல முதலாளிகளாக எப்படி உருவெடுப்பது என்ற நிர்வாக பாடத்தை கற்பியுங்கள்.

வேற்று நாட்டு காரன் தன் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. தொழில் தொடங்க நம் நாட்டுக்கு படையெடுத்து வருகிறான். நமக்கு தான் தொழில் செய்ய வக்கில்லாமல் போலி அரசியலை பேசி கொண்டு , கைகட்டி வாய்பொத்தி வேலையாட்களாக வளர்த்து வருகிறோம். நீங்கள் உமிழும் கார்ப்பரேட் சாக்கடையில் தான் zoho போன்ற தமிழக கார்ப்பரேட் வைரங்களும் வளர்த்து வருகிறது.

நகரங்கள் நோக்கி படையெடுத்து வரும் கிராமப்புற இளைஞர்களை கிராமங்களிலேயே தேக்கி , கிராமப்புறங்களை வலிமையாக்கும் வேலைகளையும் செய்து வருகிறது. நிறைய நிறைய சிறு குறு தொழில்களையாவது வளர்த்தெடுக்க பாடு படுங்கள். நம்மை வறுமையில் வைத்திருப்பது தான் இங்கே பெரிய அரசியலாக நடந்து வருகிறது, அந்த சாக்கடை அரசியலை அடித்து நொறுக்குங்கள்.

இளைஞர்கள் நினைத்தால் விவசாயத்தையும் லாபகரமான தொழிலாக எடுத்து செல்ல முடியும் , விளைந்த பொருட்களை உடனே மண்டியில் தள்ளி விட்டு கிடைக்கும் காசை வாங்கி கொண்டு போய்விடலாம் என்று நினைப்பதை நிறுத்துங்கள். விளை பொருட்களை நேரடியாக சந்தைக்கு கொண்டு செல்ல பயிலுங்கள் , மதிப்புக்கூட்டி உள் சந்தையிலும் , ஏற்றுமதி செய்து வெளிநாட்டு வர்த்தகங்களிலும் ஈடுப்பட முயற்சியுங்கள்.

நாளைக்கே அனைத்தும் நடந்து விடும் என்று சொல்லவில்லை மாற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வையுங்கள் என்று தான் சொல்கிறேன். கர்நாடகத்துடனும் , கேரளாவுடனும் , மகாராஷ்டிரா உடனும் போட்டி போடுவதல்ல வளர்ச்சி , உலகின் தலைசிறந்த மாகாணங்களுடன் போட்டி போட்டு வளர்வது தான் வளர்ச்சி. நாளைய இளைஞர் சமுதாயத்தை சரியான வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல உறுதியேற்போம்.

நன்றி .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *