தலித்துகளும் நிலமும் – பஞ்சமி நிலம் கிடைத்த வரலாறு – புத்தக விமர்சனம்

புத்தகம் : தலித்துகளும் நிலமும் – பஞ்சமி நிலம் கிடைத்த வரலாறு

ஆசிரியர் : ரவிக்குமார்

வெளியீடு : அமேசான் கிண்டல் மின்நூல்

தலித் மக்களுக்கு பஞ்சமி நிலம் கிடைத்த வரலாறு தான் இந்த புத்தகத்தின் மைய புள்ளியாக இருந்தாலும் நிலம் சார்ந்த சாதிய அரசியலை அழுத்தமாய் பேசியிருக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் ரவிக்குமார் . முன்னதாக தரவுகளின் மூலம் தலித் மக்களின் மக்கள் தொகையையும் அவர்கள் வைத்திருக்கும் நிலங்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு , அது மாநில வாரியாக எப்படி இருக்கிறது என்றும் சில கருத்துக்களை முன் வைத்து தலித் மக்கள் எப்படி நிலமற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளார் என்பதை வாதிடுகிறார் .

நில உரிமைகளுக்காக தலித் மக்கள் காலம் காலமாக போராடி வருவதற்கான சில வரலாற்று நிகழ்வுகளையும் முன் வைக்கிறார் .

பிறகு அயோத்தி தாச பண்டிதரின் சில குறிப்புக்கள் இடம் பெறுகிறது .

மிராசு தாரர் முறை மிகவும் விரிவாக அலசப்பட்டுள்ளது , மிராசு தாரர்கள் எப்படி நிலங்களை கட்டுக்குள் வைத்திருந்தனர் அது கைவிட்டு போகாமலிருக்க என்னென்ன செய்தார்கள் , அந்த நிலங்களை கட்டுக்குள் வைத்திருக்க சாதி விளையாடிய விளையாட்டென்ன , பிரிட்டிஷ் எப்படி உடந்தையாக இருந்தது பிறகு தலித் மக்களுக்கு எப்படி நிலங்களை ஒதுக்கியது என நாம் அறியாத பல சுவாரஸ்ய தகவலை உள்ளடக்கியது இந்த புத்தகம் .

போகிற போக்கில் எதோ சொல்லவேண்டும் என்றில்லாமல் இந்த புத்தகத்திற்கு வலுசேர்க்க ஆசிரியர் நிறைய தரவுகளை எடுத்து வைக்கிறார், அரிய தகவல்களும் கூட . ஒரு மணி நேரத்தில் படித்து முடித்து விட கூடிய புத்தகம் , இன்னும் நிறைய விஷயங்கள் பேசியிருக்கலாமோ என்ற எண்ணமும் வருகின்றது .

அதற்கு காரணமும் உள்ளது , புத்தகத்தில் இருந்த தரவுகள் 80 சதவிகிதம் பழைய செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் தஞ்சை மாவட்டத்தை சுற்றியே இருந்தது , இன்னும் நாட்கள் செலவிட்டு மொத்த தமிழகத்தின் தரவுகளையும் வைத்து இன்னும் பரந்துபட்ட பார்வையுடன் அச்சு புத்தகமாக வெளியிட்டிருந்தால் அது கண்டிப்பாக ஒரு அசைக்க முடியா ஆவணமாக இருந்திருக்கும் .

சிறிய புத்தகம் தான், மேலோட்டமாக பஞ்சமி நிலம் மற்றும் மிராசுதாரி முறை பற்றி அறிய விரும்பினால் தாராளமாக இந்த புத்தகத்தை படித்து விடுங்கள்.

மின் நூலுக்கு : தலித்துகளும் நிலமும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *