மனப்பத்தாயம் – புத்தக விமர்சனம்

புத்தகம் : மனப்பத்தாயம்

ஆசிரியர் : யுகபாரதி

வெளியீடு : நேர்நிரை பதிப்பகம்

பொதுவாகவே நம்மில் பல வாசிப்பாளர்களுக்கு கவிதை புத்தகங்கள் என்றாலே கொஞ்சம் அல்லர்ஜி தான் . சில கவிதை புத்தகங்கள் படிக்கவே மிகவும் கடினமான வார்த்தைகளுடன் புரியாத கோணத்தில் இருப்பது போல் இருக்கும், அது போன்ற புத்தகங்களை பார்த்தால் அவை நமக்காய் எழுதப்பட்டதில்லை என்று அந்த புத்தகங்களை தள்ளிவிடலாமே தவிர ஒட்டுமொத்தமாக கவிதை புத்தகங்களையே தவிர்ப்பது சரியா என்ன?

உண்மையில் கவிதைகள் தரும் அழகியலை, ரசனை பொங்கும் இன்ப சொற்களை எந்த நாவலும், சிறுகதைகளும், கட்டுரைகளும் கொடுத்து விடமுடியாது. இயல்பு தமிழ் கவிதைகளை படைக்கும் நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் அதில் நான் முதன்மையாய் வைப்பது மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள்.

கவிதை புத்தகங்களுக்காக தேடும்பொழுது என் கண்ணில் பட்ட புத்தகமே மனப்பத்தாயம். தமிழக அரசு விருது பெற்ற நூல் என்று முதல் பக்கத்தில் போட்டிருந்தது, ஆசிரியர் யுகபாரதி தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவர். எனவே படித்துபார்க்கலாம் என்று எடுத்து வாசிக்க ஆரம்பிதேன்.

புத்தகத்தின் முதல் கவிதையே என்னை முழுமையாக புத்தகத்திற்குள் இழுத்து சென்றுவிட்டது.

நெடி

“பால் வீச்சம் அடிக்கிற

பருவத்திலேயே

சாராய நெடியைச் சரியாகக்

கண்டுகொண்டவன் நான்.

அன்பு போதையில்

அழுத்திக் கொடுத்த

அப்பாவின் முத்தம்

சுர்ரென்று மூக்கிலேற

எப்போது நினைத்திடினும்

சுணங்குவேன்

அம்மா எப்படி

ஆயுள் முழுசும் ?”

இயல்பான வார்த்தைகள் தான் ஆனால் அது கொடுக்கும் உணர்வுகள் வேறு ரகம் . இந்த புத்தகத்தில் வரும் “வணக்கம் காம்ரேட்” என்ற கவிதையில் ஒவ்வொரு கம்யூனிஸ்ட் காரனின் குடும்ப மனநிலையின் பிரதிபலிப்பை நீங்கள் உணர்ந்துவிட முடியும் .

மிக இயல்பாக ஒரு கவிதையில் சில வரிகளை யுகபாரதி எழுதியிருப்பார்

“குறிப்பதற்குக் காகிதம் தேடும்

சந்தர்பத்தில்கூட

சில வரிகளைத்

தொலைத்துவிடுகிறேன் “

பதிவுசெய்ய படாத மிகவும் எளிமையான வார்த்தைகள் .

சொல்லாமல் வைத்திருக்கும் காதல் , கேட்கமுடியாமல் வைத்திருக்கும் காமம் , கிராமிய காதலின் எளிமை , சோற்றில் முடி விழுந்தால் வீட்டுப்பெண்ணை வசைபாடும் ஆடவன் வைப்பாட்டி வீட்டில் சுத்தம் பார்ப்பதில்லை , சோறுடைத்த சோழ வளநாடு சோத்துக்கில்லாம் பக்கத்தூர் பனியன் கம்பெனிகளில் , என்பது போன்ற கவிதைகள் எல்லாம் உண்மைகள் சொல்லும் சொற் ஓவியங்கள்.

நிறைய வலிகளையும் , சமூகத்தின் மீதான கோவங்களையும் , கிராமத்து அழகியலையும் , அவலங்களையும் , அதிகமாக இயல்புகளையும் நிறைத்து கொடுத்துள்ளார் யுகபாரதி .

ஒரு கல்யாணமாகாத பெண்ணின் உணர்வுகளாக ஒரு கவிதையை எழுதியிருப்பார் .

அரிசி தின்றால் முகூர்த்த நாளன்று மழை வரும் என்று பாட்டி அதட்ட , வராது முகூர்த்தம் மழையோடாவது வந்து தொலையட்டும் என்று அரிசியை மெள்ளும் முப்பத்தாறு வயது பெண்ணின் உணர்வுகள் , வலிகளின் சிதறல்கள் .

இயல்பான கவிதைகள் நிறைய இருந்தாலும் , சில நாட்டார் வழக்கு மொழியில் எழுதிய கவிதைகள் படித்து புரிந்து கொள்ள கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் ஒட்டு மொத்தமாக ஒரு நிறைவான உணர்வை கொடுக்கும் கவிதை புத்தகம்.

வாசிப்பாள பெருமக்களே , கொஞ்சம் கவிதைகளையும் சுவைத்து பாருங்களேன் .

புத்தகம் வாங்க : மனப்பத்தாயம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *