நலத்திட்ட உதவிகளும் வரி வருவாயும்

வருடங்கள் கடக்க கடக்க வரிகளும் ஏறி கொண்டே போகிறது. அதற்கு நேரடி தொடர்புள்ள விலைவாசியும் வேகமெடுத்துக்கொண்டே போகிறது . அடி மற்றும் நடுத்தர மக்கள் கொஞ்சம் மேல எழுவதற்குள் அடுத்தடுத்த குண்டுகளாக வரி மழை பொழிந்து கொண்டே இருக்கிறது . விலைவாசி உயர்வும் , கடன் சுமையும் கீழிருப்பவரை கீழேயே அமிழ்தி வைத்திருக்கிறது.

இந்த பிரச்சனையின் வேரை தேடி சென்றால் அதற்கு பல கிளைகள் இருக்கலாம் , அதையெல்லாம் ஆராய்வதற்கும் சீர்திருத்துவதற்கும் பல வருடங்கள் பிடிக்கும். அதை ஆராய்வதால் எந்த உடனடி பயனும் கிடைக்கப்போவதில்லை. எனவே உடனடி நிவாரணிகளாக சில விஷயங்களை மட்டும் எடுத்துவைக்கிறேன் . இவை அனைத்தும் சாமானியனாக நான் கொடுக்கும் யோசனைகள் , பொருளாதார ரீதியான ஆராய்வுக்கு உட்பட்டது.

நான் மாநில அரசின் பார்வையிலே இந்த கட்டுரையை எடுத்து செல்ல நினைக்கிறேன் எனவே மாநில அரசு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம் . தற்சமயம் தமிழக அரசு வழங்கும் பல்வேறு இலவசங்களும் , மக்கள் நல திட்டங்கள் அனைத்தும் வரவேற்கப்பட வேண்டியவை தான் அதை குருட்டு தனமாக தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை தற்காலிக நிவாரணங்களாகவே இருக்கின்றன.

மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றும் நலத்திட்டங்களாக அவையாவும் உருப்பெற வேண்டும் என்பதே என் வாதம். வருமானத்தின் அடிப்படையிலேயே சில நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் , அந்த அளவு கோளை அனைத்து திட்டங்களுக்கும் விரிவு படுத்த வேண்டும். வருமான வரி உட்சவரம்புகளுக்கு உட்பட்ட மக்கள் , வருமானவரி உட்சவரம்புக்கு உட்படாத மக்கள் என்று இரு பிரிவாக எடுத்துக்கொள்வோம்.

வருமான வரி உட்சவரம்புக்கு உட்பட்ட மக்களுக்கு வருடம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் வருமான வரி கணக்கிற்கு வரவு வைக்கலாம். நேரடி மக்கள் சேவை துறைகளில் ஈடுபடும் தொழில்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கலாம். வருமான வரி உட்சவரம்புக்கு உட்படாத மக்களுக்கு இலவச பொருட்களை தருவதற்கு பதிலாக இலவச காப்பீடுகளை வழங்கலாம்.

நடுத்தர மற்றும் கீழ்நிலை மக்கள் மிகவும் பாதிக்கப்படும் தருணங்கள் என்றால் அது நோய் வாய் ஏற்படும்போதும் , வீட்டில் இறப்பு ஏற்படும் போதும் தான் . வீட்டின் தலைவர் நோய்வாய்ப்பட்டாலோ இறந்து விட்டாலோ அந்த குடும்பமே இடிந்து விழுந்துவிடுகிறது. எனவே ரேஷன் அட்டை அடிப்படையில் அனைத்து குடும்ப தலைவருக்கும் ஆயுள் காப்பீட்டு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். அரசு காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்தும் இந்த பெரிய தொகை தொழிற்முதலீடாக நமது பொருளாதாரத்திற்கு வலுசேர்ப்பதோடு மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்கிறது.

ஆயுள் காப்பீட்டின் மூலம் குடும்ப தலைவர் தவறிவிட்டால் கூட ஒரு குறிப்பிட்ட காப்பீட்டு தொகை அந்த குடும்பத்தை காப்பாற்றும். தற்போது அரசு மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்பட்டு வந்தாலும் அது முழு வீச்சில் கட்டாயமாக அனைத்து பயனாளர்களையும் சென்று சேர்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

இதே போல தமிழக அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் வரும் சேவை மற்றும் உற்பத்தி வரியில் சில விலக்குகள் கொண்டுவருவதோடு. பொருள் தட்டுப்பாடு , மழை வெள்ளம் , புயல் காலங்கள் , விலைவாசி உயரும் தருணங்கள் என கடின காலங்களில் அவ்வப்போது வரி விலக்குகள் அளித்து , மக்களின் பொருளாதார தரத்தை அவ்வப்போது சீர்செய்ய வேண்டும் .

தமிழக அரசுக்கு கிடைக்கும் மொத்த வருவாயில் 60% க்கு மேல் அரசு ஊழியர்கள் சம்பளத்திற்க்கே செலவு செய்யப்படுகிறது . இது கட்டுப்படுத்தப்பட்டு , சேவையல்லாத தொழிற்சார்த்த அரசு நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைத்தாலே அரசின் செலவு குறைந்து அந்த நிதி மக்கள் நலப்பணிகளுக்கும் , உட்கட்டமைப்பு திட்டங்களுக்கும் பயன்படுத்தலாம். அரசு எவ்வாறெல்லாம் வருவாய் திரட்டமுடியும் என்று இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.

நன்றி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *