தமிழ் தேசியமா ? திராவிடமா ? இந்திய தேசியமா ?

தமிழக அரசியல் பெரும்பாலும் இந்த மூன்று கோஷங்களில் அடங்கி விடும் (தமிழ் தேசியம் , திராவிடம் , இந்திய தேசியம் ) . சாதிய அரசியலை கையில் எடுப்போரின் பின்புலத்தை ஆராய்ந்தால் கூட அவர்களும் இந்த மூன்று கோஷங்களில் அடங்கி விடுவார்கள்.

எது நியாயமானது என்று எடுத்து ஆராய ஆரம்பித்தால் , வீண் வாதங்கள் வளருமே தவிர தீர்வை நோக்கி செல்ல முடியாது . தீர்வுகளை சொல்லாமல் நியாயமான வாதங்களை மட்டும் உங்கள் பார்வைக்கு எடுத்து வைக்கிறேன் . மீத வேலையை உங்கள் சிந்தனை பாகத்திற்கும் மனவலிமைக்கும் விட்டு விடுகிறேன் .

மூன்று கோஷங்களுக்கும் பொதுவானவனான பாரதியின் வரிகளை எடுத்து கொண்டு ஆரம்பிக்கின்றேன்.

“வந்தே மாதரம் என்போம் – எங்கள்

மாநிலத் தாயை வணங்குதும் என்போம்

ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்

ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்

வேதிய ராயினும் ஒன்றே – அன்றி

வேறு குலத்தின ராயினும் ஒன்றே

பறையர்க ளேனும் – அவர்

எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ ?

சீனத்த ராய்விடு வாரோ ? – பிற

தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ ?

ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில்

அன்னியர் வந்து புகல்என்ன நீதி ? – ஓர்

தாயின் வயிற்றில் பிறந்தோர் – தம்முள்

சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ ?

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த

ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும் ? “

“வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநில தாயை வணங்குகிறோம் என்போம்”

ஜாதி மதங்களை கடந்து அனைவரும் ஒன்று தான் வேதம் படிப்பவராக இருந்தாலும் சரி வேறு குலத்தவராக இருந்தாலும் சரி ஒன்று தான் . தாழ்ந்தவர் என்று நீங்கள் குறிப்பிடும் பறையர்களும் எங்களில் ஒருவரே , அவர் சீனரை போன்றோ வேறு நாட்டினரை போன்றோ எங்களுக்கு தீங்கிழைப்பவர் இல்லை . ஆயிரம் ஜாதிகள் பிரித்து கொண்டு நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லாமல் சண்டை போட்டு கொண்டு , அந்நியரை எதிர்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது . சண்டை போட்டாலும் நாம் அனைவரும் ஓர் தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்கள். ஒற்றுமையாக இருந்தால் அனைவரும் வாழ்வோம் , ஒற்றுமை இல்லாத பட்சத்தில் அனைவரும் வீழ்வது நிச்சயம் . இந்த புரிதல் வந்து விட்டால் பிறகு வேறு எதுவும் தேவை இல்லை என்பதே இந்த பாரதி பாடலின் அர்த்தம் .

இந்த பாடல் விடுதலை போராட்ட காலத்தில் எழுதப்பட்டது என்றாலும் , இன்றைக்கும் இந்த பாடலின் தேவை இருந்து கொண்டு தான் இருக்கிறது . முதல் வரியிலேயே, இந்திய தேசத்தை போற்றுகிற அதே சமயம் தமிழகத்தையும் விட்டு கொடுக்காமல் வாழ்த்துகிறான் பாரதி . மாநில உரிமையை விட்டு கொடுக்காமல் அதே சமயம் , வேற்று நாட்டினரிடமிருந்து நாட்டை காப்பாற்ற இந்தியனாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறான் .

இன்றைக்கும் இந்த சிக்கல் இருந்து கொண்டு தான் இருக்கிறது , சீனா, பாகிஸ்தான் , இலங்கை என அனைத்து பக்கமும் எதிரிகள். அனைத்து மாநிலமும் கைகோர்த்து ஒத்துழைத்தால் மட்டுமே அரசியல் , பொருளாதாரம் , மருத்துவம் , ராணுவம் என அனைத்து துறைகளிலிருந்து எதிரி நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் . நான் தமிழன் என் நாட்டுக்கு மட்டும் தான் உழைப்பேன் என்று தமிழ்நாட்டுக்குள்ளயே இருந்து விட்டால் நம் ஆற்றல் அங்கு செயல்படாமல் போகிறது . இதே போன்றே அனைவரும் நினைத்தால் இந்தியாவை வீழ்த்துவது அவ்வளவு கடினமல்ல . ஒற்றுமை மட்டுமே ஒவ்வொரு இந்தியனுக்கும் வலிமை . அதே சமயம் நமது மொழி , பண்பாடு , கலாச்சாரங்களை விட்டு கொடுக்காமல் .

நமது மொழியை காக்க இந்தியாவிலிருந்து பிரிந்து நிற்பதல்ல ஒரே வழி , நம் இந்தியாவை ஆண்டாளும் அது நடக்கும் . நாம் ஒதுங்கி நிற்பதாலேயே திருப்பி அடிக்கிறார்கள் . அடிக்க முடியாத உயரத்துக்கு செல்ல நினைப்பதே விவேகம் . பிறகு அடுத்தடுத்த வரிகளில் சாதிய ஏற்ற தாழ்வுகளை களைவது பற்றியும் , ஏன் என்பது பற்றியும் விளக்குகிறார் .

எப்படி அன்னியரை எதிர்க்க இந்தியர்களாய் திரள்வது அவசியமோ , அதே போல நமக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை கலைவதற்கும் தமிழர் என்ற ஒரே புள்ளியில் திரள்வதும் அவசியம் . நாட்டு பற்று போல் தான் , தற்காப்பதற்கான ஆயுதம் போல மொழி பற்றும் இருக்க வேண்டும் . அது வெறியாக மாறுவது மிகவும் அபாயகரமானது . எந்த உள் நோக்கத்திற்காக சாதிய வாதமும் , மதவாதமும் எதிர்க்கப்படுகிறதோ . அதே புள்ளியில் மொழி பற்றையும் கொண்டு செல்லாமல் இருப்பதே நியாயம் .

தமிழர் ஆளலாம் , தமிழகத்தையும் சரி இந்தியாவையும் சரி . தமிழர் மற்றுமே ஆளவேண்டும் என்பது பாசிசம் . இந்த கோணத்தில் பார்த்தால் திராவிடம் பேசுவோரின் வாதங்கள் நியாய தராசில் முள் தட்டும் .

தமிழ் தேசியமோ ? திராவிடமோ ? இந்திய தேசியமோ? பற்று வெறியாகாமல் , நமது அடையாளங்களை இழக்காமல் , பாசிசம் செய்யாமல் , நமக்கான தேவைகளை பெறுவதோடு அடுத்தவர் தேவைகளை தட்டி பறிக்காமல் நாம் எந்த கொள்கையை பின்பற்றினாலும் அது நியாயமானதாக தான் இருக்கும்.

நன்றி .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *