வடகொரியா தெரியாத மறுபக்கம் – புத்தக விமர்சனம்

புத்தகம் : வடகொரியா தெரியாத மறுபக்கம்

ஆசிரியர் : கலையரசன்

வெளியீடு : கீழடி பதிப்பகம்

வடகொரியா தெரியாத மறுபக்கம் என்றவுடன் வடகொரியாவின் வேறு முகம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்ற ஆவலோடு தான் இந்த புத்தகத்தை வாங்கினேன். ஆனால் உள்ளே இருந்ததோ வேறு முகம் அல்ல வேறு காலம். வடகொரியாவின் வரலாற்றை கொடுத்துவிட்டு இன்றைக்கும் ஐம்பதுகளிலிருந்து தொன்னூறுகள் வரையிலான வடகொரியாவிற்கும் இருக்கும் வேறு பாட்டை காண்பித்து விட்டு வேறு முகம் என்று எழுதிவிட்டார். காலனி ஆதிக்க காலம் முதல் தொன்னூறுகள் வரையிலான வடகொரியாவின் வரலாற்றை கம்யூனிச கோணத்தில் அறிந்து கொள்ள இந்த புத்தகம் கண்டிப்பாக உதவியாக இருக்கும்.

எனக்கு இந்த புத்தகத்தில் தொடக்கம் முதல் முடிவு வரை நெருடலாக இருந்த விஷயம் மேற்குலகம் அப்படி நினைக்கிறது இப்படி திரித்து கூறுகிறது ஆனால் வடகொரியா அதிபர் நல்லவர் மக்கள் அவரை தான் விரும்பினார்கள் , பலநூறு கொலைகள் தான் செய்தார் , கொஞ்சமாக அடக்குமுறையை கையாண்டார் இது குத்தமா எங்கு தான் நடக்கவில்லை என்பது போல வடகொரியா அரசின் மக்கள் மீதான அடக்குமுறைகளை , சர்வாதிகாரத்தை நியாயப்படுத்தி கொண்டே இருப்பது இது நடுநிலையாக எழுதப்பட்ட புத்தகம் அல்ல என்பதை தெளிவாகவே உணர்த்துகிறது.

ஆசிரியர் கம்யூனிச கோணத்திலேயே இந்த புத்தகத்தை வடிவமைத்துள்ளார். நடுநிலையாளர் என்று பாவலா காட்ட திட்டுவது போல சின்ன சின்ன குற்றங்களை மட்டும் சாட்டி விட்டு கொடுங்குற்றத்தை எல்லாம் மழுங்கடித்துவிட்டார். ஆனால் வடகொரியா , தென்கொரியா பிரிவினை பற்றிய உலக அரசியல் உங்களுக்கு புரிய வேண்டும் என்றால் கண்டிப்பா இந்த புத்தகத்தில் தெளிவாக படித்தறியலாம்.

அதே சமயம் வடகொரிய அரசு பின்பற்றிய “ஜூச்சே” என்ற மாக்சிய , சோசியலிச , தேசியவாத கலவைகள் கொண்ட சித்தாந்தம் பல நல்ல விஷயங்களையும் மக்களுக்கு வழங்கியுள்ளது என்பதை மறைக்கவேண்டியதில்லை . ஆனால் அதே சமயம் உலகமயமாக்கலுக்கு பிறகு கம்யூனிச பொருளாதார கொள்கையால் நாடே பஞ்சத்தில் மூழ்கி இறந்தது என்பதை ஆசிரியரே ஒத்துக்கொண்டு விட்டார்.

இன்னும் தெளிவாக சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவின் அன்று முதல் இன்று வரையிலான உலக அரசியல் பார்வையையும் விளக்கி உள்ளது இந்த புத்தகம். நிறைய விஷயங்கள் திரித்து கூறுவது போல் தெரிந்தாலும் இந்த புத்தகத்திலிருந்து எடுத்து கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *