வேடிக்கை பார்ப்பவன் – புத்தக விமர்சனம்

புத்தகம் : வேடிக்கை பார்ப்பவன்

ஆசிரியர் : நா.முத்துக்குமார்

வெளியீடு : விகடன் வெளியீடு

கவிஞர் நா.முத்துக்குமார் தன் வாழ்க்கை அனுபவங்களை விகடனில் தொடராக எழுதி அதை தொகுத்து புத்தகமா விகடன் குழுமமே வெளியிட்டுள்ளார்கள் . வாழ்க்கை அனுபவங்களுக்குள்ளாக சுவாரஸ்யங்களை ஒளித்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக கட்டவிழ்க்கும் நா.முத்துக்குமாரின் விவரணைகளே தனி அழகியல் தான் .

பொதுவாகவே நா முத்துக்குமாரின் வரிகள் எளிய சொற்களை தாங்கிய அழகியலை செதுக்கி கொண்டே இருக்கும் , அவருடைய கவிதைகள் அனைத்தும் எளிய மனிதர்களுடனான அனுபவங்கள் தான் . அவன் பெரும்பாலும் தன் பாலியகாலங்கள் கொடுத்த அனுபவங்களை கொண்டு தான் நம் உணர்வுகளுக்கு தீனி போடுகிறான் .

சமீப காலங்களில் தான் எனக்கு நா முத்துக்குமாரை மிகவும் பிடித்து போனது , சில கவிஞர்களின் கவிதைகளை புரிந்து கொள்வதற்க்கே தனி நிபுணவத்துவம் தேவை படும் , ஆனால் நா முத்துக்குமார் இயற்கை தரும் அதே எளிமையை நெய்து கொடுக்கிறான் .

அவன் வரிகளை விட அவன் வாழ்க்கை அழகானது , அதில் ஒரு 40 சதவிகிதம் சோகங்கள் இருக்கலாம் ஆனால் அசுத்தங்களை விட அழகியலுக்கு அவன் மனம் பழகிப்போனதால் , மனித உறவுகள் அவனை மேகங்களுக்குள்ளாகவே பொத்தி கொண்டது .

அவன் தன் தந்தையுடனும் , தான் பெற்ற பிள்ளையினுடனும் பேசும் உரையாடல்கள் எல்லாம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை , அழகானவை . அனேகமாக அனைத்து அப்பாக்களுக்கும் பிள்ளைகளுக்கும் கூட நெருக்கமானவையாக மாறலாம் .

அவன் வாழ்க்கையை மாற்றிய “தூர் ” கவிதை , அவனுடன் பயணித்த முன்னாள் எளிய இந்நாள் பெரிய மனிதர்கள் , அவன் அப்பா , அவன் மகன் , அவன் அம்மாவை பெற்ற பாட்டி , அவனை மெறுகேற்றிய ஆசான்கள் , காஞ்சிபுரத்து வீடு , ஆறுகள் , அவன் பாலியகாலங்கள் , அண்ணன் அறிவுமதி என அனைவரும் எனக்கு நெருக்கமாகி போகிறார்கள் .

வாழ்க்கை அழகானது அதை உணர்வு பூர்வமாய் அனுபவிக்க , சுவைக்க நா.முத்துக்குமார் மிகவும் உந்துதலை கொடுக்கிறான் . இந்த புத்தகம் கண்டிப்பாக ஒரு அழகான அனுபவத்தை கொடுக்கும்

அவன் மரணித்து இருக்கக்கூடாது , என் வீட்டில் ஒருவனாக அவனை நினைத்து மனம் கனத்து தான் கிடக்கிறது அதை வருடுவதும் அவன் கவிதைகளே .

புத்தகம் வாங்க : வேடிக்கை பார்ப்பவன்

மின் நூலுக்கு : வேடிக்கை பார்ப்பவன் மின் நூல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *